search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஹஜ் யாத்திரை"

    • மாதவரம் பால் பண்ணையில் சித்தா பல்கலைக்கழகம் அமைக்க 25 ஏக்கர் நிலம் அடையாளப்படுத்தப்பட்டு நிலமாற்றம் செய்யும் பணிகள் முடிவுற்றுள்ளது.
    • முதலமைச்சரே வேந்தர்களை பல்கலைக்கழகங்களில் நியமிப்பதற்கு அதிகாரம் உள்ளது என்று இதற்கு முன்பு குஜராத், மேற்கு வங்காளம், கர்நாடகா ஆகிய மாநிலங்கள் கொண்டுவந்துள்ளது.

    சென்னை:

    சென்னை, தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வளாகத்தில் உள்ள பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை இயக்குனர் அலுவலகத்தில் நேற்று, மாநில அளவிலான அனைத்து இணை இயக்குனர் நலப்பணிகள் மற்றும் 19 மாவட்ட செயற்பொறியாளர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில், மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் செந்தில்குமார், தேசிய நல்வாழ்வு குழும இயக்குனர் சில்பா பிரபாகர் சதிஷ், தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குனர் உமா, பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

    இதைத்தொடர்ந்து, அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழ்நாடு முழுவதும் மருத்துவ கட்டமைப்புகளை மேம்படுத்த ரூ.1,136 கோடியே 32 லட்சம் மதிப்பீட்டில் 44 திட்டப்பணிகளுக்கு கடந்த பிப்ரவரி மாதம் 28-ந்தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். இதற்கான ஆய்வுக்கூட்டம் இன்று நடைபெற்றது. மேலும், தமிழகத்தில் இருந்து ஹஜ் பயணத்திற்கு செல்லக்கூடிய பயனாளிகளுக்கு வரும் 15-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை 19 இடங்களில் மருத்துவ முன்பரிசோதனை, உடற்தகுதி பரிசோதனை மற்றும் தடுப்பூசி முகாம்கள் மூலம் தடுப்பூசிகள் வழங்கப்பட உள்ளது. 3 வயதுக்கு மேற்பட்டோருக்கு கியூ.எம்.எம்.வி. தடுப்பூசி ஒரு தவணை மற்றும் 65 வயதுக்கு மேற்பட்டோருக்கு எஸ்.ஐ.வி. மற்றும் கியூ.எம்.எம்.வி. ஆகிய 2 தடுப்பூசிகள் ஒரு தவணை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசிமிருந்து 6 ஆயிரத்து 300 டோஸ் கியூ.எம்.எம்.வி. மற்றும் 945 டோஸ் எஸ்.ஐ.வி. தடுப்பூசிகள் வந்துள்ளது.

    மாதவரம் பால் பண்ணையில் சித்தா பல்கலைக்கழகம் அமைக்க 25 ஏக்கர் நிலம் அடையாளப்படுத்தப்பட்டு நிலமாற்றம் செய்யும் பணிகள் முடிவுற்றுள்ளது. இதேபோல, அண்ணா நகரில் உள்ள சித்தா ஆஸ்பத்திரியில், சித்த மருத்துவ பல்கலைக்கழகத்தின் தலைமையிடம் பேரறிஞர் அண்ணாவின் பெயரில் திறப்பதற்கு தயார் நிலையில் உள்ளது. 2022 பிப்ரவரி மாதம் 18-ந்தேதி, தமிழ்நாடு சித்த மருத்துவப் பல்கலைக்கழக வரைவு மசோதா தயாரிக்கப்பட்டு கவர்னரின் பரிந்துரை மற்றும் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டது. 2022 மார்ச் 15-ந்தேதி இந்த வரைவு மசோதாவை தமிழ்நாடு சட்டமன்றத்தில் அறிமுகப்படுத்த ஒப்புதல் அளித்தார்.

    2022 ஏப்ரல் 28-ந்தேதி சட்டசபையில் மசோதா நிறைவேற்றப்பட்டது. 2022 மே மாதம் 5-ந்தேதி கவர்னர் ஒப்புதல் வேண்டி மசோதா சட்டத்துறையால் அனுப்பபட்டது. 2 மாதம் கழித்து, 'மசோதாவில் உள்ள மாணவர் சேர்க்கை சம்பந்தப்பட்ட சில பிரிவுகள் இந்திய மருத்துவ முறைக்கான தேசிய ஆணையச் சட்டத்தில் உள்ள சில சட்டப்பிரிவுகளுக்கு முரண்பாடாக உள்ளதா? என்பதை ஆராய்ந்து குறிப்புரை வழங்குமாறு கேட்டுக்கொண்டார். இதற்கு விரிவான விளக்கம் கவர்னரின் தனிச்செயலருக்கு அனுப்பபட்டது. கவர்னரின் ஒப்புதலை பெற 7 முறை நினைவூட்டல் கடிதம் அனுப்பப்பட்டது. இந்த நிலையில், மசோதா பல்கலைக்கழக மானியக் குழுவின் விதிமுறைகளுக்கு முரணாக இருக்கின்றது என்ற தகவல் கூறப்பட்டு வந்தது.

    முதலமைச்சரே வேந்தர்களை பல்கலைக்கழகங்களில் நியமிப்பதற்கு அதிகாரம் உள்ளது என்று இதற்கு முன்பு குஜராத், மேற்கு வங்காளம், கர்நாடகா ஆகிய மாநிலங்கள் கொண்டுவந்துள்ளது. அதுபோலவே இந்த மசோதாவிலும் கொண்டுவரப்படும் என்று முன்பே தெரிவிக்கப்பட்டது. குஜராத்தில் இந்த மாதிரியான மசோதா கொண்டுவரப்பட்டபோது அந்த மாநிலத்தின் கவர்னர் ஒப்புதல் கொடுத்துள்ளார். மத்திய, மாநில உறவை ஆராயும் பூஞ்சி ஆணையம், 'கவர்னருக்கு வேந்தர்களை நியமிக்கும் பணி கூடுதல் சுமையாகும்' என்று கூறியுள்ளது. எனவே, கவர்னர் இதனை கருத்தில் கொண்டு சித்த மருத்துவ பல்கலைக்கழக மசோதாவுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று கடிதம் விரைவில் அனுப்பப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×